Dec 17, 2015

பெண்ணே, எது உன்னை தடுக்கிறது.


பெண்ணே, எது உன்னை தடுக்கிறது.

உலகப்பொருளாதாரம் உன்னைச்சுற்றியே இயங்கினாலும் உன்பெயரில் இல்லை ஒரு வங்கிக்கணக்கு.
அறிவுசார் பட்டியலில் எந்த வரிசையில் உனது பெயர் ?

பள்ளி, கல்லூரிகளில் பதக்கம் வென்றவர்கள் எங்கே பறந்தீர்கள்?
அடுப்பகரைகளையும் அழகு சாதனப் பொருட்களையும் கடந்து  வாருங்கள்.
படி தாண்டிவிட்டால் பரத்தை பட்டம் உபயம், பயந்து சாகாதீர்.

ஆடை ஆபரணகளுக்காக அறிவை அடகு வைத்தீரா?
உம் ஒப்பனையை நிறுத்தி, புத்தியை தீட்டு.
நீ ஆணுக்காக படைக்கப்பட்டவள் அல்ல. அகிலத்தையே படைப்பவள்.

நீ படைப்பை நிறுத்தினால், இனி உலகில் இல்லை மனித இனம்.
உன் பலத்தை உணர்ந்து கொள். உன் அங்குசம் யாரிடம் ?
உன் எண்ணங்களால் நீ  சிறைப்படாதவரை, இந்த உலகம் ஒன்றும் செய்யாது.

நம் மூதாதையர் அழகை முன் நிறுத்தவில்லை.
வீரமும், விவேகமும் கொண்டு, அறிவினால் ஆண்டார்கள்.
அவ்வையின் வாரிசுகள் அறிவிழந்து போவதா ?
விண்ணில் மறைந்த கல்பனாவும், இம்மண்ணின் வாரிசு என்பதை மறவாதே.

ஆன்ம பலம் பெற்ற மண்ணில், 'புறத்தோற்றம்' தான் அழகு என்று ஆனது எப்போது?
அன்னை தெரசாவின் ஆளுமையில் அழகு இல்லை என்பாயா ?

எது உன்னை தடுக்கிறது?
எது உன் அறிவை வீழ்த்தியது?
எங்கே போனது வேலு நாச்சியின் மரபணு?
எடு வாளை, சுழற்று உன் எண்ணத்தடைகளை நோக்கி....



-கலைச்செல்வி