Sep 21, 2017

அன்பு மகளுக்கு, ஒரு தாயின் கடிதம்




தோள் வரை வளர்ந்த பிள்ளையை
தோழியாக  பார்க்கையிலே
வருடங்கள் ஓடியது  புரிகிறது..


வாழ்க்கையை  என்னவென்று  நான்  சொல்வேன்.
வாழ்ந்தே  காட்டுகிறேன்  பார்த்துக்கொள்.
விதியும், சதியும் என்ன  செய்யும்?
விழிப்புடன் நாம்  இருக்கையிலே.

நண்பனும்  எதிரியும்  நமக்குள்ளே
நம்மை  நாமும் அறிந்து கொண்டால்.
நேசிப்பும்  வாசிப்பும்  சுவாசமானால்
பிரகாசிக்கும்  நம்  நாட்கள்.

அன்பு உள்ளம் கொண்டோரை 
அரவணைத்து பக்கத்தில் வை.
ஆணவ குணம் கொண்டவரை
அன்பால் வெல்ல முயற்சித்துப்பார்.

பெண்ணை  உடலாய் பார்ப்போரை
புன்முறுவலுடன்  கடந்து  போ..
பேச்சில் ஏளனம்  செய்வோரை, உன்
பெருந்தன்மையால்  வென்று  விடு.

எதிரிகள் என்றும் நம் துரோணர்கள்
ஏகலைவனாய் நாம் இருந்தால்.
துரோகிகளை  தூரம்  வைத்து,
துணிவே துணையென கொள்ளம்மா.

நன்றியுரைப்போம்

இரு கரம் கூப்பி, எம் சிரம் தாழ்த்தி நன்றியுரைப்போம்
வருண பகவானே.

மண்ணின் ஈரம், மரங்களில் படர்ந்து, எம்
மனங்களை நிறைத்தது.
சில மரங்கள் மறித்த பின்பு தான்
உமக்கும் கருணை பிறந்தது.

ஆழ்துழாய் கிணற்றில், உயிர் வளர்த்த மரங்கள்
இன்று தாய்ப்பால் உண்ட பரவசத்தில்
தலை நிமிர்ந்து நிற்கிறது.

காலை வேளையில், கையில் பால் கலையத்துடன் வரும்
முகங்களில் எல்லாம் ஒரே புன்னகை.
வெள்ளாளணின் புன்னகைக்கு, வேறென்ன காரணம் இருக்கும்?
முன்னிரவில் பெய்த மழையைத் தவிர.

மக்களும், மாக்களும் மகிழ்ந்து உறவாடி, கால்நடை பெருக்கி,
எம் மண் செழித்து, எவ்வித்தாயினும் கங்கா பாண்டமாய்
காய்த்து தள்ள, கருணை புரிந்த கருணாமூர்த்திக்கு
நன்றியுரைப்போம்!